பங்களாப்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு படுகாயம்; வனவிலங்குகளை வேட்டையாட வைத்த 2 பேர் கைது
பங்களாப்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு படுகாயம் அடைந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
டி.என்.பாளையம்
பங்களாப்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு படுகாயம் அடைந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி
பங்களாப்புதூர் அண்ணாநகர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 27). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தன்னுடைய மாட்டை தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியையொட்டிய இடத்தில் மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார்.
பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது மாட்டின் வாய்ப்பகுதி சிதைந்து அதில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மதன்குமார் இதுபற்றி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
நாட்டு வெடிகுண்டை...
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மேய்ச்சல் பகுதியில் போட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்ததால் தான் மாட்டின் வாய் சிதைந்து படுகாயம் அடைந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த மகேஷ்வரன் (37), பங்களாப்புதூர் அருகே உள்ள எருமைக்குட்டையை சேர்ந்த நடராஜ் (59) ஆகியோர் தான் நாட்டு வெடிகுண்டை வனப்பகுதிக்குள் வைத்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து 2 பேரையும் பிடிக்க பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் அண்ணாநகர் சென்றனர். போலீசாரை கண்டதும் மகேஷ்வரனும், நடராஜனும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
2 பேர் கைது
அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்களது பையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை காண்பித்து அருகில் வந்தால் நாட்டு வெடிகுண்டை வீசி விடுவோம் எனக்கூறி மிரட்டினர்.
ஆனால் போலீசார் 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுவெடிகுண்டை வைத்ததாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அதில் 38 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.