திருநங்கைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவ பிரிவு தொடக்கம்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
சேலம்:-
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவ பிரிவு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நேற்று ஆஸ்பத்திரியில் நடந்தது. விழாவுக்கு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி தலைமை தாங்கி உயர் சிறப்பு மருத்துவ பிரிவை தொடங்கி வைத்தார். பின்னர் திருநங்கைகளுக்கு டீன் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:-
சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் செயற்கை மார்பகம் பொருத்துதல், பிறப்பு உறுப்பு மாற்றுதல் அறுவை சிகிச்சை, கர்ப்பபை நீக்கும் அறுவை சிகிச்சை ஆகியவை செய்யப்படுகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இதுதவிர குரல் மாற்றம் தொடர்பான சிகிச்சை, முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குதல், பாலின மாற்ற ஹார்மோன் சிகிச்சை, மனநல ஆலோசனை, பாலின நோய் தடுப்பு சிகிச்சை ஆகியவை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி, 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். 3 மாதம் உளவியல் மற்றும் மனநல டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். 6 மாதம் அகச்சுரப்பியல் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். ஓராண்டு தொடர் சிகிச்சைக்கு பிறகு திருநங்கைகளுக்கான சங்கத்தில் இருந்து சான்றிதழ் பெற்று வர வேண்டும். மேலும் உயர் சிறப்பு மருத்துவ பிரிவு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
அதைத்தொடர்ந்து உயர் சிறப்பு மருத்துவ பிரிவு தொடங்கியதற்கு நன்றி தெரிவித்து திருநங்கைகள் பேசினர். நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், துணை கண்காணிப்பாளர் பொன் ராஜராஜன், சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் பிறப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பேராசிரியர் ராஜ்குமார் மற்றும் திருநங்கைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.