ஏற்காட்டில் திடீர் காட்டுத்தீ
ஏற்காட்டில் திடீரென காட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் வனப்பகுதியில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.;
ஏற்காடு:-
ஏற்காட்டில் நாகலூர் செல்லும் வழியில் ேஜ.ஜே. நகர் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான செடி, கொடிகள் மற்றும் மரங்கள் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அங்குள்ள செடி, கொடிகள் காய்ந்து இருந்தன. இந்த நிலையில் அந்த வனப்பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு திடீரென்று காட்டுத்தீ பிடித்து எரிந்தது. காற்று வீசியதால் தீ மள,மளவென பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு இரவு 7 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. இந்த தீயில் பல ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.