மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது
மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா(வயது 29). இவரும், சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(31) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன்ராஜ் வெளிநாடு சென்றுவிட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதிகா ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திலும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் இருவரையும் அழைத்து ேபாலீசார் பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டிற்கு சென்ற ராதிகாவை, மோகன்ராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு கம்பியால் தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த ராதிகா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து மோகன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.