இன்ஸ்டாகிராம் காதலால் ரெயிலில் மாயமான மாணவி காதலனுடன் மீட்பு
இன்ஸ்டாகிராம் காதலால் ரெயிலில் மாயமான குமரி மாணவியை காதலனுடன் போலீசார் மீட்டனர். அவர் பெற்றோருடன் செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
இன்ஸ்டாகிராம் காதலால் ரெயிலில் மாயமான குமரி மாணவியை காதலனுடன் போலீசார் மீட்டனர். அவர் பெற்றோருடன் செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவி மாயம்
குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சபீனா (வயது 19). இவரும், இவருடைய அக்காளும் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வர இருவரும் திட்டமிட்டனர். அதன்படி பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.
ரெயில் கரூரை தாண்டி வந்தபோது சபீனாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய அக்காள் அந்த ரெயில் பெட்டி முழுவதும் தேடிப்பார்த்தும் காணவில்லை. பின்னர் அவர் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இன்ஸ்டாகிராம் காதல்
அந்த புகாரின் பேரில் நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சபீனாவை தேடி வந்தனர். அதே சமயத்தில் சபீனாவின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் சபீனா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள வெள்ளக்குடிபட்டியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் ஆகியோர் அங்கு விரைந்தனர்.
அப்போது சபீனா, காதலன் அருண்குமார் (வயது 27) என்ற டிரைவருடன் வீட்டில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 6 மாதமாக பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது சபீனா தனது காதலனை கரூர் ரெயில் நிலையத்துக்கு வரச்சொல்லி அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் திருமயம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ தொடங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கோர்ட்டில் ஆஜர்
இதையடுத்து 2 பேரும் நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சபீனா காதல் கணவருடன் தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். அப்போது அங்கு வந்த சபீனாவின் பெற்றோர் கண்ணீரும், கம்பலையுமாக எவ்வளவோ பேசி பார்த்தும் தன்னுடைய முடிவை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் போலீசார் நேற்று காலை நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சபீனா, அருண்குமார் ஆகிய 2 பேரையும் ஆஜர்படுத்தினர். கோர்ட்டிலும் சபீனா தனது காதல் கணவருடன் தான் செல்வேன் எனக்கூறியதாலும், அவர் மேஜர் என்பதாலும் காதலனுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சபீனா தனது காதல் கணவருடன் புறப்பட்டு சென்றார்.