12 கோடி ஆண்டுகள் தொன்மையான கல்மரப்படிமம் மீது சாலை அமைப்பு

12 கோடி ஆண்டுகள் தொன்மையான கல்மரப்படிமம் மீது சாலை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-11 20:27 GMT
குன்னம்:

தொன்மை வாய்ந்த கல்மர படிமம்
பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிரிடேஷன்(டைனோசர்கள் வாழ்ந்த காலம்) காலத்து வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்மர படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சுற்றுப்புற கிராமங்களில் டைனோசர் முட்டை படிமங்கள், நத்தை படிமங்கள், கிளிஞ்சல் படிமங்கள் கண்டறியப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குன்னம் கிராமத்தின் அருகே உள்ள ஆணைவாரி ஓடையில் சுமார் 8 அடி நீள கல்மர படிமம் கண்டறியப்பட்டது.
சுமார் 12 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்த கல்மர படிமத்தை, சாத்தனூரில் உள்ள கல்மரப்பூங்கா வளாகத்தில் உள்ள அருங்காட்சியத்திலோ அல்லது குன்னம் தாலுகா அலுவலகம் அருகில் அருங்காட்சியம் அமைத்தோ பத்திரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சாலை அமைப்பு
இதையடுத்து கல்மர படிமம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அரசு அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் 2 ஆண்டுகள் ஆகியும் கல் மர படிமத்தை அதிகாரிகள் பாதுகாக்க முயற்சி எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் வேப்பூர் ஒன்றிய பொது நிதியில் ரூ.2 லட்சம் செலவில் மண் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கல் மரம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், கல் மரத்தை மண் கொட்டி மூடி சாலை அமைத்தனர்.
கோரிக்கை
இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், மண் கொட்டி மூடப்பட்ட தொன்மையான கல்மர படிமத்தை மீட்டு குன்னத்தில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்று குன்னம் தாசில்தார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து குன்னம் தாசில்தார் அனிதா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் கல்மர படிமம் மூடப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்