13 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர் மீட்பு

டைல்ஸ் நிறுவனத்தில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்டான்.

Update: 2022-03-11 19:45 GMT
சிவகங்கை,

டைல்ஸ் நிறுவனத்தில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்டான்.

சிறுவன் மீட்பு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில், கடந்த 8-ந் தேதி தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில், காரைக்குடி பகுதியில் குழந்தை தொழிலாளர் குறித்த கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, சைல்டு லைன் உறுப்பினர் ஹரிகரன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ், கிராம நிர்வாக அலுவலர் அர்ச்சுனன் ஆகியோர் உடன் இருந்தனர். 
அப்போது  காரைக்குடி அருகே  ஒரு டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த 13 வயதிற்குட்பட்ட சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான். அதனை தொடர்ந்து, நிறுவனத்தின் உரிமையாளர் மீது குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடும் நடவடிக்ைக

கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை சிவகங்கை மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு நடத்திய ஆய்வில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைத்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்த 14 கடை, நிறுவன உரிமையாளர்கள் மீது சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை ஆகிய கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், தேவகோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், குழந்தை தொழிலாளியை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும், 14 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய 24 நிறுவன உரிமையாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டரால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 4 கடைக்காரர்கள் மீது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தகவல் தெரிவிக்கலாம்

எனவே, குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டம் 2016-ன் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு தொழில் சம்பந்தப்பட்ட பணிகளிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். 
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் குறித்த தகவல்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என தொழிலாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்