நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி
நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ரூ.1½ கோடி மோசடி
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவருடைய உறவினர் பழனிச்சாமி என்பவர் பக்ரைன் நாட்டில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆறுமுகம் நகரைச் சேர்ந்த செந்தில் (48), உமாபதி (41) ஆகிய 2 பேரிடம் காரைக்குடி பகுதியில் இடம் வாங்குவதற்காகவும் ரூ.2 கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை பெற்றுக்கொண்ட 2 பேரும் ரூ.42 லட்சத்து 98 ஆயிரத்து 300 மதிப்பிற்கு இடம் வாங்கி கொடுத்து உள்ளனர். அதன் பின்னர் பழனிச்சாமி கொடுத்த தொகையில் மீதமுள்ள தொகை ரூ.1 கோடியே 62 லட்சத்து 11 ஆயிரத்து 300-ஐ திரும்ப தரவில்லையாம். இடமும் வாங்கித் தரவில்லையாம்.
2 பேர் மீது வழக்கு
இதுகுறித்து பலமுறை கேட்டும் பணம் திரும்ப கிடைக்காததால் பழனிச்சாமியின் உறவினரான சுரேஷ் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி செந்தில் மற்றும் உமாபதி ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.