பாம்பன் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து தொடக்கம்
பாம்பன் குருசடை தீவிற்கு வனத்துறை சார்பில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ராமேசுவரம்,
பாம்பன் குருசடை தீவிற்கு வனத்துறை சார்பில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குருசடை தீவு
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றி கடல் பசு, ஆமை, டால்பின், கடல் குதிரை, பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட 3600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு கடல் பகுதியை சுற்றிலும் டால்பின் மற்றும் கடல் பசு, பவளப்பாறைகள் உள்ளிட்ட உயிரினங்களும் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.
அதுபோல் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவு வரையிலும் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்க வனத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டு கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் இருந்து 3 பைபர் படகுகள் வாங்கிக் கொண்டு வரப்பட்டு பாம்பன் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பலத்த சூறாவளி காற்றில் இரண்டு படகுகள் லேசான சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் இந்த திட்டத்திற்கு மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் குருசடை தீவு வரையிலான சுற்றுலா படகு போக்குவரத்து திட்டமும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
படகு போக்குவரத்து தொடக்கம்
இந்தநிலையில் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவு வரையிலும் வனத்துறை சார்பில் சுற்றுலா படகு போக்குவரத்து திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது. குருசடை தீவு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் படகு போக்குவரத்து நேற்று முதல் தொடங்கப்பட்டது. மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குந்துகால், சின்னப் பாலம் கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதுபற்றி வனச்சரகர் வெங்கடேஷ் கூறியபோது. தற்போது ஒரு பைபர் படகு மட்டுமே இந்த சுற்றுலா படகு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு படகில் 12 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம். ஒரு நபருக்கு ரூ,400 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு படகுகளின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முடிந்த பின்னர் அந்த இரண்டு படகுகளும் இந்த சுற்றுலா படகு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். குந்துகால் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள கடல் பகுதியில் படகில் பயணம் செய்து குருசடை தீவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
குருசடை தீவு ஒட்டிய கடற்கரை பகுதியில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகள் உள்ளிட்டவைகளை பார்த்த பின்னர் மீண்டும் படகில் ஏற்றிக்கொண்டு குந்துகால் பகுதிக்கு அழைத்து வரப்படுவார்கள். தினமும் காலை 7 மணியில் இருந்து பகல் 2 மணி வரையிலும் படகு போக்குவரத்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.