கடைகளில் திருடியவர் கைது
கொள்ளிடம் பகுதியில் பூட்டை உடைத்து கடைகளில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூட்டை உடைத்து மளிகை கடையில் ரூ.15 ஆயிரத்தையும், இறைச்சி கடையில் ரூ.8 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மளிகை கடைக்காரர் புத்தூரை சேர்ந்த பிரபு (வயது 40), இறைச்சி கடைக்காரர் கொள்ளிடத்தை சேர்ந்த பவுல் ரகுமான் (49) ஆகியோர் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாகசேரிகுளம் பகுதியை சேர்ந்த அமாவாசை மகன் மோகன் என்ற மோகன்தாஸ் (40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், கொள்ளிடம் கடைவீதியில் உள்ள மளிகை கடை மற்றும் இறைச்சி கடைகளில் பணம் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மோகன் என்ற மோகன்தாசை கைது செய்தனர்.