கடலூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு போலீசார் விசாரணை
கடலூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருடு போனது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூர்,
கடலூர் தேவனாம்பட்டினம் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 71). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் மற்றொரு வீடு உள்ளது. நேற்று அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவப்பிரகாசம் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த வெள்ளி குத்து விளக்கு, டம்ளர் உள்ளிட்ட வெள்ளி பொருட்களை காணவில்லை. வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுபற்றி அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.