ரெயில்வே கேட்டை மூட எதிர்ப்பு: தண்டவாளத்தில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம் விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம் அருகே ரெயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து தண்டவாளத்தில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-11 18:15 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே பிஞ்சனூர்- இளங்கியனூர் சாலையின் குறுக்கே விருத்தாசலம்-சேலம் ரெயில்வே பாதை செல்கிறது. இங்குள்ள ஆளில்லா ரெயில்வே கேட்டை கடந்து தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வந்தன. 

இதனிடையே அந்த ரெயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் மழைக்காலங்களில் அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. 

இதனால் ஆளில்லா ரெயில்வே கேட்டையே கிராம மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விருத்தாசலம்- சேலம் ரெயில்பாதை தற்போது மின் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூட, ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்தனர். 

தண்டவாளத்தில் அமர்ந்து... 

இதையடுத்து ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடும் பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி கிராம மக்கள், தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே அங்கு வந்த விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் மற்றும் மங்கலம்பேட்டை போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் என கிராம மக்களிடம், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறினார். 

அதன்பேரில் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்