பரங்கிப்பேட்டை அருகே ரெயில் சக்கரத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவர் சாவு தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்ற போது சோகம்

பரங்கிப்பேட்டை அருகே ரெயில் சக்கரத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார். தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்ற போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2022-03-11 18:12 GMT

பரங்கிப்பேட்டை 

பண்ருட்டி அடுத்த கந்தர்க்கோட்டை புலவனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரவாணன். விவசாயி. இவரது மகன்  பாரதிராஜா (வயது 21). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. படித்து வருகிறார். 

இவர் ரெயிலில் வந்து படித்து சென்று வருகிறார். வழக்கம் போல் நேற்று மாலை கல்லூரி வகுப்பு முடிந்து வீட்டுக்கு ரெயிலில் செல்வதற்காக சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து  மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயிலில் ஏறி பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

தவறி விழுந்த செல்போன்

ரெயில்  பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரெயில் படிக்கட்டில் அமர்ந்திருந்த பாரதிராஜா, கையில் வைத்திருந்த செல்போன் தவறி கீழே விழுந்து, ரெயிலுக்கு அடிப்பகுதியில் சென்றது. இதையடுத்து, நடைமேடையில் உட்கார்ந்த நிலையில் கையை உள்ளே விட்டு செல்போனை பாரதிராஜா எடுக்க முயன்றார். 

அதற்குள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு விட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் உறைந்து போன பாரதிராஜாவை, கண்ணிமைகும் நேரத்தில் ரெயிலுக்கு அடிப்பகுதியில் இழுத்து போட்டுவிட்டது. இதில் ரெயில் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் உடல் 2 துண்டான நிலையில் அவர் துடிதுடித்து இறந்து விட்டார்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி அறிந்த  பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் சிதம்பரம் இருப்பு பாதை ரெயில்வே போலீஸ்  இன்ஸ்பெக்டர் அருண் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் கிடந்த  மாணவன் பாரதிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து இறந்துபோன பாரதிராஜாவின் பெற்றோருக்கும் போலீசாா தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்