பக்தர்கள் பால்குட ஊர்வலம்
வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
வெளிப்பாளையம்
நாகை வெளிப்பாளையம் பெருமாள் வடக்கு தெருவில் உள்ள முச்சந்தி காளியம்மன் கோவிலில் பங்குனி உற்சவ விழா 4-ந் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. 6-ந் தேதி சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பால்குட விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு திரளான பக்தர்கள் வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து பால் காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் காளியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சக்தி கரகம் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், பெருமாள் வடக்கு தெரு பொதுமக்கள் செய்து வருகின்றனர்.