பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளம்
பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளம்
நாகப்பட்டினம்
உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைத்துள்ளது என செல்வராஜ் எம்.பி. கூறினார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். இணைத்தலைவர் ராமலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர்கள் அருண்தம்புராஜ் (நாகை), லலிதா (மயிலாடுதுறை) ஆகியோர் வரவேற்றனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, ராஜகுமார், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் செல்வராஜ் எம்.பி.பேசியதாவது:-
முன்னேற்றத்திற்கான அடித்தளம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு உருவாக்கினார். அதே நிலைப்பாட்டையே, தற்போதைய முதல்-அமைச்சர் மு க.ஸ்டாலின் கடைபிடித்து வருகிறார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைந்திருக்கிறது.
நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மத்திய அரசு அறிவிக்கின்ற திட்டங்கள் மக்களிடையே எந்த அளவிற்கு சென்றிருக்கின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
முன்னதாக நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் 55 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சத்து 67 ஆயிரத்து 556 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஷகிலா, முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்கள் பெரியசாமி, முருகண்ணன், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.