தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சிதிலமடைந்த மின்கம்பம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம் செல்லும் சாலையில் ஒனக்கல் மேடு பகுதியில் உள்ள மெயின் சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்த எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மித்திரன் ராதா, வேலாயுதம்பாளையம், கரூர்.
குளத்தை ஆக்கிரமித்துள்ள சம்பு
கரூர் மாவட்டம் நொய்யலை அடுத்த முத்தனூரில் புகளூர் வாய்க்கால் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டது. இந்த குளத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து உபரி நீர் வருகிறது. வரும் உபரிநீர் குளத்தில் தேங்கி பின்னர் அருகில் உள்ள புகளூர் வாய்க்காலுக்கு வெளியேறி வருகிறது. இந்நிலையில் குளத்தில் சம்பு மற்றும் பல்வேறு செடி, கொடிகள் முளைத்து இருப்பதால் அதிக உபரி நீர் குளத்திற்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் முளைத்துள்ள சம்பு மற்றும் பல்வேறு செடிகளை அகற்றி குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயிகள், நொய்யல், கரூர்.
தெருநாய்களால் தொல்லை
பெரம்பலூர் ரோவர் சாலை, ரோஸ் நகர் சாலை மற்றும் பிற பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை சாலையில் வாகனங்கள் செல்லும்போது ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ரோவர் சாலை, பெரம்பலூர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் உள்ள ஏரிகரையோரம் உள்ள சாலையோரத்தில் செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது மின்கம்பிகளில் உரசி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காட்டுப்பிரிங்கியம், அரியலூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் வழியில் கள்ளத்தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இதனை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிவிட்டு இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கள்ளத்தெரு, திருச்சி.
போதிய குடிநீர் இன்றி மக்கள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள பொது குடிநீர் குழாய் இணைப்பின் வழியாக சிலர் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், உரிய கட்டணம் செலுத்தி சொந்தமாக குடிநீர்குழாய் இணைப்பு மூலம் தண்ணீர் பெற்றவர்களுக்கு குடிநீர் வருவது இல்லை. மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து பகுதி மக்களும் போதி குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம், புதுக்கோட்டை.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார்பேட்டை முதல் நெசவாளர் காலனி 1-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நெசவாளர் காலனி, திருச்சி.