வேப்பூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: வாலிபரை அடித்துக் கொன்ற 6 பேர் கைது பரபரப்பு தகவல்

வேப்பூர் அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை அடித்துக்கொன்ற 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-03-11 17:58 GMT

வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் அபிசுந்தர்(வயது 17). இவர் கடந்த 9-ந்தேதி அதே ஊரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தார். அவரது செல்போன் மற்றும் செருப்பு கிணற்றின் அருகே கிடந்தது.

இதுபற்றி அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபிசுந்தர் சாவில் சந்தேகம் இருப்பதாக பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அடித்து கொலை

இதற்கிடையே நேற்று முன்தினம் அபிசுந்தரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அபிசுந்தர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் கூறினர். 

 இதனிடையே அபிசுந்தரின் பிரேத பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவரது கழுத்து நெறிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி படுத்தினர். இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் வேப்பூரில் முகாமிட்டு சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்தார். 

முன்விரோதம்

விசாரணையில், அபிசுந்தர் குடும்பத்திற்கும், அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் இளையராஜா, தங்கவேல் மகன் அண்ணாதுரை ஆகியோருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளதும், இவர்களின் தூண்டுதலின் பேரில்  இளையராஜாவின் சகோதரியான நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த

 மணிமேகலை (31), அவரது கணவர் பாண்டியன்(33), மற்றொரு சகோதரியான முருகராஜ் மனைவி பெரியம்மாள் (36), 17 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அபிசுந்தரை கழுத்தை நெறித்தும், அவரது மூக்கு, தாடை பகுதியில் குத்தி சுய நினைவு இழக்க செய்து, கிணற்றில் தூக்கி போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. 

6 பேர் கைது

இதையடுத்து சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர். மேலும் மணிமேகலை, பாண்டியன், பெரியம்மாள், இளையராஜா, அண்ணாதுரை, 17 வயதுடைய சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்