என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்தில் தீப்பற்றி எரிந்த பொக்லைன் எந்திரம் நெய்வேலியில் பரபரப்பு
நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்தில் திடீரென பொக்லைன் எந்திரம் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மந்தாரக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-வது சுரங்கம் மந்தாரக்குப்பத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நேற்று வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது.
இதில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பகுதியில் மண் வெட்டுதல் மற்றும் மேல் மண் நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்றும் இந்த வகை எந்திரங்களை கொண்டு பணிகள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. சுரங்க பகுதியில் தொழிலாளர்களும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
தீப்பிடித்து எரிந்தது
இந்த நிலையில், காலை 11.40 மணிக்கு திடீரென அங்கு நின்று கொண்டிருந்த பொக்லைன் எந்திரம் தீப்பற்றி எரிந்தது. எந்திரம் முழுவதும் பற்றி எரிந்த தீயை அங்கிருந்த தொழிலாளர்கள் அணைக்க முற்பட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
இதனிடையே சம்பவ இடத்துக்கு என்.எல்.சி. நிறுவனத்தின் தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் எந்திரத்தில் பெரும் பகுதி எரிந்து சேதமாகிவிட்டது.
தீப்பற்றிய பொக்லைன் எந்திரத்தின் என்ஜினில் ஆயில் சரிவர மாற்றாமல் இருந்ததன் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் நடந்துவருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.