ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவருக்கு எதிராக கம்மாபுரத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் வாக்களித்தனர்
கம்மாபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவருக்கு எதிராக நேற்று நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் வாக்களித்தனர்.
கம்மாபுரம்,
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 20 வார்டுகள் உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. 8 வார்டுகளிலும், தி.மு.க. 4, பா.ம.க. 3, தே.மு.தி.க. 2, அ.ம.மு.க. 1, சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து பா.ம.க. மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் கம்மாபுரம் ஒன்றியக் குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த மேனகா விஜயகுமாரும், துணைத் தலைவராக அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரான முனுசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவரின் செயல்பாடு மீது சில கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 15 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனு அளித்தனர்.
நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு
இதை தொடர்ந்து நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நேற்று கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராம்குமார் முன்னிலையில் நடந்தது. இதில் அ.தி.மு.க. வை சேர்ந்த 4 கவுன்சிலர்கள், தி.மு.க. 3, பா.ம.க. 2, அ.ம.மு.க. 1, தே.மு.தி.க. 1, சுயேச்சை 2 ஆகியோர் என்று மொத்தம் 13 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
வாக்கெடுப்பின் போது தலைவர், துணைத் தலைவர் மற்றும் 5 கவுன்சிலர்கள் என்று மொத்தம் 7 பேர் பங்கேற்கவில்லை.
மறைமுக வாக்கெடுப்பு குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ஒன்றிய அலுவலகத்தில் நடந்த மறைமுக வாக்கெடுப்பு குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
போலீஸ் பாதுகாப்பு
மறைமுக வாக்கெடுப்பு முடிந்த பின்னர், 13 கவுன்சிலர்களும் போலீஸ் வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக ஒன்றிய அலுவலக வளாக பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படடு இருந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.