ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு அரசு பஸ்சில் கடத்தி வந்த 20½ கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 20½ கிலோ கஞ்சா கடத்தி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 20½ கிலோ கஞ்சா கடத்தி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
ஆந்திராவில் இருந்து காட்பாடி வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க சோதனைச் சாவடிகளில் அவ்வப்போது போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை வேலூர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ தலைமையில் போலீசார் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.
20½ கிலோ கஞ்ச பறிமுதல்
அப்போது சித்தூரில் இருந்து சேலத்திற்கு வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் பை வைத்திருந்தார். அதனை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. மொத்தம் 201/2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மெயின் ரோட்டில் வசிக்கும் அமுல்ராஜ் மகன் ஜோசப் (வயது 32) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20½ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா எங்கிருந்து யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.