பிமல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விலக கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்
பிமல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விலக கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
பொம்மிடி:
தர்மபுரி மாவட்டம் பி.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் யார் என்பதில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தலைமை அறிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சின்னவேடிக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என கோரி பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தில் கிராம மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை திடீரென உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.