நல்லம்பள்ளி அருகே பரபரப்பு போதை ஊசிகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

நல்லம்பள்ளி பகுதியில் போதை ஊசியை புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-11 16:59 GMT
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி பகுதியில் போதை ஊசியை புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போதை ஊசி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் போதை ஆசாமிகளுக்கு போதை ஊசி புழக்கத்தில் விட்டு போடுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுபாட்டு அதிகாரிகள் மற்றும் அதியமான்கோட்டை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அவர்கள் நல்லம்பள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பொதியகவுண்டர் மயில்கொட்டாய், சாமிசெட்டிப்பட்டி ஆகிய கிராமத்தை சேர்ந்த வஜ்ரவேல் (வயது47), முருசேன் (46) ஆகிய 2 பேரும் போதை ஊசிகளை பெட்டி பெட்டியாக பதுக்கி, போதை பிரியர்களுக்கு, ஊசி போட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
அப்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது போதை ஊசியை ஒட்டப்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்த சோமசுந்தரம் (51) என்பவர் மருந்து கடை வைத்துள்ளதும், இவருக்கு கெட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த காமராஜ் (42) என்பவர் பெங்களூருவில் இருந்து போதை ஊசிகளை கொண்டு வந்து விற்பனைக்காக கொடுத்ததும் தெரியவந்தது. பின்னர் வஜ்ரவேல், முருகேசன் ஆகியோர் மூலம் இவர்கள் போதை ஊசிகளை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.  இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தர்மபுரி சரக மருந்தக ஆய்வாளர் சந்திராமேரி அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நல்லம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்