நாமக்கல் அருகே கார் கடத்தல்
நாமக்கல் அருகே கார் கடத்தல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய கார்கள் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான காரை வாங்க விரும்புவதாக மேலாளர் ரமேஷிடம் கூறி உள்ளனர். மேலும் அதற்கு முன்பணமாக ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்து உள்ளனர். அதை நம்பி அந்த விற்பனை நிலையத்தின் மேலாளர் ரமேஷ், 2 பேரையும் காரை ஓட்டி பார்க்க அழைத்து சென்றுள்ளார். நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காரை சிறிது தூரம் ஓட்டி சென்ற பிறகு, அதை நிறுத்தி தேவையற்ற சத்தம் கேட்பதாக அந்த மர்ம நபர்கள் கூறி உள்ளனர். பின்னர் காரில் அமர்ந்திருந்த மேலாளர் ரமேஷை கீழே தள்ளிவிட்டு, காரை அதிவேகமாக கடத்தி சென்றனர். தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரின் உரிமையாளர் தனியார் நிதி நிறுவனத்தில் காருக்கு கடன் வாங்கியதும், கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்ததும் தெரியவந்தது. மேலும் நிதி நிறுவனத்தினர் காரை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.