இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு நாடு முழுவதும் 150 மாணவர்கள் தேர்வு; இஸ்ரோ தகவல்

இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

Update: 2022-03-11 16:13 GMT
பெங்களூரு:

இளம் விஞ்ஞானி திட்டம்

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) பெங்களூருவில் உள்ளது.

  இந்த நிலையில் இஸ்ரோ, யுவ விஞ்ஞானி கார்யக்கிரம்(யுவிகா) அதாவது இளம் விஞ்ஞானி திட்டத்தை தொடங்கியுள்ளது. விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி திட்டங்கள் குறித்த ஞானத்தை இளம் மாணவர்கள் குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களிடம் ஏற்படுத்துவது தான் இதன் நோக்கம் ஆகும். இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பங்கேற்க வேண்டும்

  இளைஞர்கள் தான் நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள். அதனால் அவர்கள் மத்தியில் அறிவியல், தொழில்நுட்பத்தில் நவீன விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இளம் விஞ்ஞானி திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின் நோக்கம் இந்தியாவில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 150 பேரை தேர்வு செய்து இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

  இந்த திட்டத்தால் அதிகளவில் மாணவர்களை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித அடிப்படையிலான பணிகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தூண்டும். இந்த திட்டம் வருகிற மே மாதம் 16-ந் தேதி தொடங்கி அதே மாதம் 28-ந் தேதி வரை நடைபெறும். மாணவர்கள் இங்கேயே தங்கி இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும். இந்த நிகழ்வு நடைபெறும் நாட்களில் உரைகள், பிரபல அறிவியல் விஞ்ஞானிகளின் அனுபவங்கள், சோதனை செயல் விளக்கங்கள், ஆய்வகங்களை நேரில் பார்க்க செய்தல், நிபுணர்களுடன் கலந்துரையாடல், செய்முறை மற்றும் நிகழ்வால் மாணவர்கள் அடையும் பயன்கள் குறித்த விவரங்களும் பகிர்ந்து கொள்ளப்படும்.

முன்னுரிமை அளிக்கப்படும்

  இந்த திட்டத்திற்காக 150 மாணவர்கள் சில அளவுகோல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது 8-ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி-கல்லூரி மற்றும் மத்திய-மாநில அரசுகள் ஏற்பாடு செய்த அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

இந்த திட்டம் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையம், அகமதாபாத்தில் உள்ள விண்வெளி அப்ளிகேஷன் மையம், ஐதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் மையம், சில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி அப்ளிகேஷன் மையம் ஆகிய 5 இஸ்ரோ மையங்களில் இந்த திட்ட நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்