கூடலூர் கேரளா இடையே நடுரோட்டில் பழுதடைந்து நின்ற லாரி
கூடலூர்-கேரளா இடையே நடுரோட்டில் பழுதடைந்து நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கூடலூர்
கூடலூர்-கேரளா இடையே நடுரோட்டில் பழுதடைந்து நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
குண்டும் குழியுமான சாலை
கூடலூரில் இருந்து கேரள மாநிலம் பெருந்தல்மன்னா, திருச்சூர், பாலக் காடு, மலப்புரம் உள்பட பல மாவட்டங்களுக்கு சாலை செல்கிறது. இந்த வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
கூடலூர்- கேரளா சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது டன், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதியம் 1 மணிக்கு கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு பிளைவுட் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது.
பழுதாகி நின்றி லாரி
அந்த லாரி கூடலூா அருகே உள்ள கீழ்நாடுகாணி பகுதியில் வந்தபோது திடீரென பழுதடைந்து நடுரோட்டில் நின்றது. மேலும் அந்த லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றப்பட்டு இருந்ததால் சாலையில் கவிழும் வகையில் சாய்வாக நின்றது.
இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
மேலும் தமிழகம்- கேரளா இடையே அரசு பஸ்கள், தனியார் வாகனங்களும் இயக்கப்படவில்லை.
வாகன ஓட்டிகள் அவதி
இதுகுறித்து தகவலறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் இருந்ததால் உடனடியாக அகற்ற முடியவில்லை.
இதையடுத்து போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சாலையின் ஒருபுறத்தில் மோட்டார் சைக்கிள்கள், சிறிய ரக கார்கள் மட்டும் செல்ல அனுமதித்தனர்.
ஆனால் கனரக வாகனங்கள், பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இது குறித்து பயணிகள் கூறும் போது, குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.