கோத்தகிரியில் பயனற்ற கிணறுகளில் தவறி விழும் வனவிலங்குகள்
கோத்தகிரியில் பயனற்ற கிணறுகளில் வனவிலங்குகள் தவறி விழுந்து வருவதால் அவற்றை மூட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரியில் பயனற்ற கிணறுகளில் வனவிலங்குகள் தவறி விழுந்து வருவதால் அவற்றை மூட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வனவிலங்குகள்
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, காட்டு பன்றி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், இந்த வனவிலங்குகள் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வர தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது கிணறுகள் மற்றும் தனியார் கிணறுகள் மீது கம்பிகள் போட்டு மூடாமல் இருக்கிறது. அத்துடன் ஏராளமான பயனற்ற கிணறுகளும் திறந்தபடி கிடக்கிறது.
திறந்தவெளி கிணறு
இதன் காரணமாக இந்த கிணற்றுக்குள் வனவிலங்குகள் தவறி விழுந்து உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. கூக்கல் தொரைப் பகுதியில் குரங்கை வேட்டையாட துரத்திச் சென்ற சிறுத்தை மூடப்படாத கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.
இதே போல கோத்தகிரி கீ ஸ்டோன் சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமை உயிரிழந்தது.
இதே போல கோத்தகிரி கோட்டா ஹால் சாலையில் இருந்து டர்மோனா செல்லும் சாலை யோரத்தில், குடியிருப்புக்களை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் 3 கிணறுகள் உள்ளன.
மூட வேண்டும்
யாருக்கும் பயனில்லாத இந்த கிணற்றுக்குள் காட்டு பன்றி, காட்டெருமை கள் அடிக்கடி தவறி விழுந்து உயிரிழந்து வருகிறது.
எனவே இதுபோன்ற பயனில்லாத கிணறுகளை மூடவும், பயன்பாட்டில் உள்ள கிணற்றை சுற்றிலும் கம்பிபோட்டு மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.