மாநில ஆக்கி போட்டியில் சென்னை அணி சாம்பியன்

கோவில்பட்டியில் நடந்த மாநில அளவிலான ஆக்கி போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது

Update: 2022-03-11 15:02 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நடந்த மாநில அளவிலான ஆக்கி போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மாநில ஆக்கி போட்டி
கோவில்பட்டியில் பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 17-வது ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் 28 அணிகள் கலந்து கொண்டன. நேற்று காலையில் நடந்த முதலாவது அரை இறுதி போட்டியில் சென்னை தமிழ்நாடு ஆக்கி அகாடமி அணியும், கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் விளையாடியது. இதில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
2-வது அரை இறுதி போட்டியில் மதுரை தென்மண்டல போலீஸ் அணியும், கடலூர் ஜெம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில் மதுரை அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
சென்னை அணி சாம்பியன்
மாலையில் நடந்த 3-வது இடத்துக்கான போட்டியில் கடலூர் ஜெம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் விளையாடியது. இதில் கடலூர் அணி 7-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை தமிழ்நாடு ஆக்கி அகாடமி அணியும், மதுரை தென்னக போலீஸ் அணியும் விளையாடியது. இதில் சென்னை அணி 3-1 கோல் கணக்கில் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 
பரிசளிப்பு
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம் பரிசுகள், கோப்பைகளை வழங்கினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் ராதாகிருஷ்ணன், ராமசாமி, கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
--

மேலும் செய்திகள்