கோடை வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோழித்தீவனத்தில் வைட்டமின் சி, நுண்ணூட்ட சத்துகளை பயன்படுத்தலாம்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

கோடை வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் வைட்டமின் சி மற்றும் நுண்ணூட்ட சத்துகளை பயன்படுத்துமாறு ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2022-03-11 14:16 GMT
நாமக்கல்:
வானிலை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இன்று வடகிழக்கு திசையில் இருந்தும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும். அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 65 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.
நுண்ணூட்ட சத்துகள்
சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. 
எனவே பண்ணையாளர்கள் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த தெளிப்பான்களை உபயோகிப்பதோடு, தீவனத்தில் வைட்டமின் சி மற்றும் நுண்ணூட்ட சத்துகளை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்