நாமக்கல் நரசிம்மர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாமக்கல் நரசிம்மர் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் கோவில் தக்கார் ஜான்சிராணி மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு அன்னவாகனத்தில் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சாமி திருவீதி உலா நடந்தது. அதைத்தொடர்ந்து குளக்கரை மண்டபத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி வருகிற 18-ந் தேதி வரை தினமும் காலையில் திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. மேலும் 17-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 19-ந் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.