கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை: டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்ற டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல்:
கூடுதல் விலைக்கு விற்பனை
நாமக்கல் மாவட்டத்தில் 180-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே நாமக்கல், ராசிபுரம் மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாவட்ட மேலாளர் உத்தரவின்பேரில், பறக்கும் படையினர் 6 பிரிவுகளாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம் மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 14 கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
அபராதம் வசூல்
இதையடுத்து அந்த கடைகளின் விற்பனையாளர்களுக்கு பறக்கும் படை அதிகாரிகள் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து, அதனை வசூல் செய்தனர்.
மேலும் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தால், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.