ஆம்பூர் அருகே எருது விடும் விழாவில் காளைகள் முட்டி 8 பேர் காயம்

ஆம்பூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் காளைகள் முட்டி 8 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-03-11 13:43 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழா வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் நேற்று எருது விடும் விழா நடந்தது. வீதியின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. திருப்பத்தூர், வேலூர் ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. எருது விடும் விழா வீதி குறுகலான பகுதியாக இருந்ததாலும், இளைஞர்கள் ஏராளமானோர் காளைகள் மீது கை போட ஆர்வத்துடன் வீதியை மறித்து நின்றிருந்ததால் காளைகள் ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. இதனால் சில காளைகள் ஓடிக் கொண்டிருந்த போது திடீரென எதிரில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர்  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த ஜோலார்பேட்டை காளைக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாவது பரிசு விருதம்பட்டு பல்சர் ராணி காளைக்கு ரூ.75 ஆயிரம், மூன்றாவது பரிசாக மேல் பள்ளிப்பட்டு மிஸ்டர் ஒயிட் காளைக்கு ரூ.50 ஆயிரம் என 51 காளைகளுக்கு ஊர் நாட்டாண்மை பழனி பரிசுகளை வழங்கினார். 

மேலும் செய்திகள்