தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் எப்போது?
வால்பாறை நகராட்சியில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் எப்போது? என்ற கேள்வி எழுந்து உள்ளது. மேலும் வளர்ச்சி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.;
வால்பாறை
வால்பாறை நகராட்சியில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் எப்போது? என்ற கேள்வி எழுந்து உள்ளது. மேலும் வளர்ச்சி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
தேர்தல் ஒத்திவைப்பு
வால்பாறை நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. பின்னர் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வால்பாறை நகராட்சிக்கு தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்படாததால் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன. இந்த பகுதியை ெபாருத்தவரை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மட்டுமே வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும். அதன்பிறகு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும். அப்போது வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாது. அவ்வாறு அமைத்தாலும் தரமாக இருக்காது.
வளர்ச்சி பணிகள் பாதிப்பு
இதுகுறித்து வால்பாறை நகராட்சி மக்கள் கூறியதாவது:-
மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளாக வால்பாறை நகராட்சியில் வளர்ச்சி பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. தற்போது தேர்தல் நடத்தப்பட்டதால், வளர்ச்சி பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்படாமல், மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே முடீஸ்-தோனிமுடி சாலை, பெரியகல்லார் சாலை, சோலையாறு நகர் சாலை, சிங்கோனா- நீரார் அணை சாலை பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தற்போது அந்த பணிகள் முடங்கும் அபாயம் நிலவுகிறது. எனவே மறைமுக தேர்தலை விரைவாக நடத்தி வளர்ச்சி பணிகளை தொடங்க வேண்டும். குறிப்பாக வெள்ளமலை டாப், ஊசிமலைமட்டம், காஞ்சமலை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் உள்ள பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.