கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் நூலகம் அருகில் வசித்து வந்தவர் ராமசாமி(வயது 78). சலவை தொழிலாளி. இவர் நேற்று இரவில் தனது வீட்டில் இருந்து கோவில்பாளையத்துக்கு நடந்து சென்றார். எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் இருந்து நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்டு ராமசாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமசாமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசாமி மீது மோதிய வாகனம் குறித்து நான்கு வழிச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.