பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மும்முரம்
வால்பாறையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வால்பாறை
வால்பாறையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குண்டும், குழியுமாக...
கோவை மாவட்டம் வால்பாறையானது, சிறந்த மலைப்பிரதேசமாக உள்ளது. இங்குள்ள சாலைகள் பல்வேறு காரணங்களால் அவ்வப்போது பழுதடைந்து வருகின்றன.
இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. மேலும் வால்பாறை-குரங்குமுடி, சிங்கோனா-சிறுகுன்றா ஆகிய சாலைகளும் பழுதடைந்து காணப்பட்டன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.
சீரமைப்பு பணி
இதை ஏற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இ்ந்த பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, வால்பாறையில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதை பயன்படுத்தி சாலைகளை சீரமைப்பதால், மழைக்காலத்தில் அவதிப்படும் சூழல் தவிர்க்கப்படும். இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.