கயத்தாறு ஆற்றங்கரை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா
கயத்தாறு ஆற்றங்கரை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா நடந்தது
கயத்தாறு:
கயத்தாறில் ஆற்றங்கரை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் முத்தாரம்மன் கோவிலில் இருந்து சாமியை அலங்காரம் செய்து வாகனத்தில் வைத்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் கும்பம் எடுத்தும், ஒருவர் 20 அடி நீள வேல் குத்தியும் 2 கி.மீ. தூரம் மேளதாளத்துடன் வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று வழிபாடு நடத்தினர். நேற்று மதிய கொடை, சாமக்கொடையை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலி கொடுக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முடிகாணிக்கை செலுத்தினர். பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். ஏராளமானோர் அக்னி சட்டி எடுத்து காணிக்கை செலுத்தினர்.
திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசுப்பிரமணியன், முருகன், மாரியப்பன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.