பருத்தி ரக விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மரபணு பருத்தி ரக விதைகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் அனுமதி பெறாத, களைக்கொல்லி தாங்கி வளரக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள், மத்திய அரசால் அங்கீகாரம் பெறாமல் ஒரு சில நிறுவனங்கள் விற்பனை செய்யக் கூடும்.
எனவே மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத களைக்கொல்லி தாங்கி வளரக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள் விற்பனை செய்வது மற்றும் அதை வாங்கி சாகுபடி செய்வது விதைச்சட்டம் 1966-ன் படி விதி மீறல் செயலாகும்.
மேலும் இச்செயலில் ஈடுபடும் விதை உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விதை விற்பனை நிலையங்கள் மீது விதைச்சட்டம் 1966, விதைகள் விதி 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம்
இது குறித்து கோவை விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை இயக்குனர் ஆணைப்படி மாவட்டந்தோறும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் விதை ஆய்வு துணை இயக்குனர், விதைச்சான்று உதவி இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்டு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக மேற்கண்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.