ஆரணி நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மேலாளர் உள்பட 4 பேர் கைது

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 8 கிலோ கவரிங் நகைகளை அடகுவைத்து ரூ2 கோடியே 39 லட்சம் மோசடி செய்த வங்கி முன்னாள் தலைவர் மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-11 12:06 GMT
ஆரணி

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 8 கிலோ கவரிங் நகைகளை அடகுவைத்து ரூ.2 கோடியே 39 லட்சம் மோசடி செய்த வங்கி முன்னாள் தலைவர், மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.2¼ கோடி மோசடி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நகர கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் மேலாளராக ஆரணியை சேர்ந்த லிங்கப்பா, நகை மதிப்பீட்டாளராக மோகன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

அ.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார் வங்கி தலைவராக இருந்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகள் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தன. 

இந்தநிலையில் நகை மதிப்பீட்டாளர் மோகன், வங்கி தலைவர் அசோக்குமாருடன் இணைந்து சுமார் 8.4 கிலோ போலி (கவரிங்) நகையை அடகுவைத்து ரூ.2 கோடியே 39 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். 

இதற்கு மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன் மற்றும் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். 

இது தொடர்பாக வேலூர் மண்டல கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் போலியாக நகை வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

மேலாளர் உள்பட 4 பேர் கைது

இதனையொடுத்து செய்யார் கூட்டுறவு துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னையில் உள்ள வணிக குற்றப் புலனாய்வு பிரிவில் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ராஜ்குமார் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், எழுத்தர் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வணிக குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், அ.தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளருமான அசோக்குமார், வங்கி மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். 

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அலுவலர் சரவணன் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்