பங்களிப்பு தொகையை ரத்து செய்யக்கோரி பயனாளிகள் காத்திருப்பு போராட்டம்

தேனி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளுக்கான பங்களிப்பு தொகையை ரத்து செய்யக்கோரி பயனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-11 11:36 GMT
தேனி:
காத்திருப்பு போராட்டம்
தேனி அருகே தென்றல் நகர், வள்ளிநகர் பகுதிகளை சேர்ந்த சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 175 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பு வீடுகளை பெற பயனாளிகள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொகுப்பு வீடுகள் கட்டப்படும் பகுதிக்கு  வந்தனர். அங்கு அவர்கள், பங்களிப்பு தொகையை ரத்து செய்துவிட்டு தங்களுக்கு இலவசமாக வீடுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்து பங்களிப்பு தொகை ரத்து செய்யப்படுவது குறித்து உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பங்களிப்பு தொகை ரத்து
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தென்றல் நகர் நரிக்குறவர் சமுதாய தலைவர் சங்கர் கூறுகையில், "எங்கள் சமுதாய மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்படுகிறோம். தற்போது பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ஒவ்வொருவரும் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்று அரசு கூறுகிறது. இந்த தொகையை செலுத்தும் அளவுக்கு எங்களிடம் பொருளாதார வசதி கிடையாது. 

எனவே எங்களின் வாழ்வாதாரம் கருதி இந்த பங்களிப்பு தொகையை ரத்து செய்து எங்களுக்கு இலவசமாக வீடுகளை ஒப்படைக்க வேண்டும். தமிழக மக்களின் நலன்களைக் காக்க எத்தனையோ திட்டங்களை செய்து வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கள் மக்களின் நலன் கருதி பங்களிப்பு தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்" என்றார்.

இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் பெரியகுளம் தாசில்தார் ராணி அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்