கற்கால கருவிகள் கற்திட்டைகள் கண்டுபிடிப்பு
தண்டராம்பட்டு அருகே கல்வராயன் மலைப்பகுதியில் கற்கால கருவிகள் மற்றும் கற்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
தண்டராம்பட்டு அருகே கல்வராயன் மலைப்பகுதியில் கற்கால கருவிகள் மற்றும் கற்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
வரலாற்று ஆய்வு நடுவம்
தண்டராம்பட்டு தாலுகா பீமாரபட்டி அருகே தென்மேற்கு பகுதியில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கீழ்வலசை, மேல்வலசை, அக்கரைபட்டி ஆகிய 3 கிராமங்களில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பழனிச்சாமி, கிராம உதவியாளர் முருகன் ஊர்பொதுமக்களுடன் களஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் கண்டறியப்பட்டன. கீழ்வலசை கிராமத்தில் மாரியம்மன் கோவில் என மக்கள் வழிபடக்கூடிய இடத்தில் பல்வேறு காலத்தைச் சேர்ந்த சிலைகளும், நடுகற்கள் போன்று சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பலகை கற்களும் காணப்படுகின்றன.
இதில் சிறப்புக்குரியதாக சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய 5 கற்கருவிகளும் இங்கு வைக்கப்பட்டு மக்களால் வணங்கப்படுகின்றன.
இந்த இடத்தில் உள்ள பொருட்களின் காலம் சுமார் 5000 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை பழமையான பல பொருட்கள் உள்ளன.
புதிய கற்கால கருவிகள்
இதேபோல் அரசினர் உண்டு உறைவிட பள்ளியின் அருகில் உள்ள விநாயகர் கோவில் 20-க்கும் மேற்பட்ட கற்கால கருவிகள் மக்களால் வைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து வருகிறது.
தொடர்ந்து மேல்வலசை கிராமத்தில் உள்ள கோவிலில் இரும்பு கருவிகளும் 25-க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் கண்டறியப்பட்டன.
இதன் அருகில் உள்ள மலைப்பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்காலத்தை சேர்ந்த கற்திட்டைகள் காணப்படுகின்றன.
முதலில் காணப்படும் கற்திட்டை இடுதுளையுடன் கூடியதாக அமைந்துள்ளது.
இந்த கற்திட்டைகள் நான்கு புறமும் செங்குத்துக்கற்களை வைத்தும் மேலே ஒருபெரிய பலகைக்கல் வைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் கிழக்கு பக்கக்கல்லில் வட்டவடிவ துளையுடன் காணப்படுகிறது.
இந்த கற்திட்டைக்குள் பீமரபட்டியை சேர்ந்தவர்கள் சிலை வைத்து வழிவழியாக வணங்குகிறார்கள். மற்றொரு இடத்தில் காணப்படும் கற்திட்டைகள் 4 புறமும் கற்கள் வைத்து அடுக்கி மேலே பலகைக்கல் வைத்து மூடப்பட்டுள்ளது. இதே அமைப்பில் ஆற்றை ஒட்டிய மற்றொரு இடத்திலும் உள்ளன.
இரும்பினை உருக்கி கருவிகள்
மேலும் கற்குவையுடன் கூடிய கற்திட்டைகள், பூமிக்குள் புதைந்திருக்கும் கல் பதுக்கைகள் என பலவகைப்பட்ட வடிவில் காணப்படுகின்றன.
இதில் சில கற்திட்டைகள் இன்று வரை அப்பகுதியில் உள்ள மக்களால் வழிபாட்டில் இருந்து வருகிறது. மேலும் இவ்விடத்தில் இரும்பினை உருக்கி கருவிகள் செய்ததற்கான தடயங்கள் உள்ளன.
இதுகுறித்து தொல்லியல் அறிஞர் ராஜன் கூறுகையில், இந்த இடத்தில் கண்டறிப்பட்டுள்ள புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. இவை உருவாக்க பயன்படுத்தப்பட்ட கற்கள், அதன் இடம் ஆகியவற்றை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.
இந்த இடத்தில் புதியகற்கால மக்கள் வாழ்ந்த வசிப்பிடங்கள், பாறை ஓவியங்கள் போன்றவையும் குறித்து ஆய்வு செய்தால் மேலும் பல பண்பாட்டுத் தகவல்கள் கிடைக்கும் என்றார்.