வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்கு பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்கு பராமரிப்பாளர்களுக்கு சுற்றுச்சூழல் செறிவூட்டல் தொடர்பான கள பயிற்சியும் வழங்கப்படுகிறது.
தென் மண்டல விலங்கு பராமரிப்பாளர்களுக்கான 3 நாள் திறன் வளர்ப்பு பயிற்சி கருத்தரங்கம் உயிரியல் பூங்காவில், வன விலங்குகள் மேலாண்மை என்ற தலைப்பில் சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொடங்கப்பட்டது. டெல்லியில் உள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி திட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 11 உயிரியல் பூங்காக்களை சேர்ந்த விலங்கு காப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த பயிற்சி கருத்தரங்கின் நோக்கம், உயிரியல் பூங்கா பராமரிப்பாளர்களுக்கு, விலங்குகள் பராமரிப்பு திறன் மற்றும் மேலாண்மை, சுற்றுச்சூழல் செறிவூட்டல் மற்றும் ஆளுமை மேம்பாடு போன்றவற்றை வழங்குவதாகும்.
இந்த கருத்தரங்கில் விலங்கு பராமரிப்பாளர்களுக்கு, உயிரியல் பூங்காவில் அடிப்படை சுகாதார நெறிமுறைகள், வன உயிரினங்களின் பராமரிப்பு மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், விலங்குகளை கையாளுதல், கட்டுப்பாடு மற்றும் நடத்தையினை கண்காணித்தலில் நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகள், அவசரநிலைகள் மற்றும் நெறிமுறைகளின் விலங்கு பராமரிப்பாளர்களின் பரந்த பார்வை, விலங்கு மேலாண்மையில் அடிப்படை உயிரியல், வன உயிரின வளர்ப்பு மற்றும் செறிவூட்டுவதற்கான கருவிகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் தேர்ச்சி்பெற்ற கள வல்லுனர்களால் பயிற்சியும் சுற்றுச்சூழல் செறிவூட்டல் தொடர்பான கள பயிற்சியும் வழங்கப்படுகிறது.