நண்பர்களுடன் குளித்தபோது கிணற்றில் மூழ்கி மாணவன் சாவு
நண்பர்களுடன் குளித்தபோது கிணற்றில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் இறந்தான்.
சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் சுகுமார்(வயது 13). இவர், மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
சுகுமார், நேற்று தனது நண்பர்களுடன் பள்ளி முடிந்து குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கத்தில் உள்ள கிணற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுகுமார், தண்ணீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால் விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மூழ்கிய மாணவன் சுகுமாரை பிணமாக மீட்டனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.