பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2022-03-10 23:45 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமையான வைணவ கோவில்களில் பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மன்னாரும், மூலஸ்தானத்தில் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணரும், உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் என 3 நிலைகளில் பெருமாள் எழுந்தருளி உள்ளார்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கருடக்கொடி, சக்கரத்தாழ்வாருடன் 4 மாடவீதி ரத வீதிகளில் வலம் வந்தது. பின்னர் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னா் 16 வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்று, கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
விழா நாட்களில் தினமும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ராஜகோபாலர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருவிழாவான வருகிற 19-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு புதிதாக செய்யப்பட்டுள்ள தேரில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான 20-ந் தேதி காலை 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்