நெல்லை அருகே பயங்கரம்: நிலத்தரகர் சரமாரி வெட்டிக் கொலை

நிலத்தரகர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்

Update: 2022-03-10 23:23 GMT
நெல்லை:
நெல்லை அருகே ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சாட்சியளிக்க இருந்த நிலையில் நிலத்தரகர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நிலத்தரகர் 
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 40), நிலத்தரகர்.
இவர் நேற்று காலையில் ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் குளிக்க ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார். ஸ்கூட்டரை கரையில் நிறுத்தி விட்டு, கால்வாயில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.
வெட்டிக் கொலை 
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் திடீரென்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வைகுண்டத்தின் முதுகு பகுதியில் வெட்டியது. அவர் சுதாரித்து தடுப்பதற்குள் அந்த கும்பல் வைகுண்டத்தின் கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த வைகுண்டம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) டி.பி.சுரேஷ்குமார், கூடுதல் சூப்பிரண்டு மாரிராஜ், ஊரக துணை சூப்பிரண்டு ஜெபராஜ், பாளையங்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
வைகுண்டம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது அங்கு மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கொலை நடந்த இடத்தில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர் சீனியம்மாள் மற்றும் குழுவினர் சேகரித்தனர்.
முன்விரோதம்
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, கொலையான வைகுண்டம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் ஒரு வழக்கில் வைகுண்டம் சாட்சி கூறுவது தொடர்பாக அவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதனால் வைகுண்டம் நெல்லை டவுனில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து வந்தார். அவர் அவ்வப்போது பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கு மனைவி, குழந்தைகளை பார்க்க செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற வைகுண்டம், நேற்று கொலைமுயற்சி வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சாட்சியளிக்க ஆஜராக திட்டமிட்டு இருந்தார். இதற்காக நேற்று காலையில் வைகுண்டம் தனது வீட்டில் இருந்து கால்வாயில் குளிக்க சென்றிருந்த நிலையில் மர்ம கும்பலால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் ெதரியவந்தது. எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற பல்வேறு கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் குவிப்பு
கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கொலை செய்யப்பட்ட வைகுண்டத்திற்கு மாரித்தாய் என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். நெல்லை அருகே நிலத்தரகர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்