வியாபாரி கொலை வழக்கில் கள்ளக்காதலியின் கணவர் உள்பட 2 பேர் கைது

வியாபாரி கொலை வழக்கில் கள்ளக்காதலியின் கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது

Update: 2022-03-10 22:30 GMT
சிக்கமகளூரு:
மொலகால்மூருவில் வியாபாரி கொலை வழக்கில் கள்ளக்காதலியின் கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. 

வியாபாரி கொலை

சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு என்.எம்.எஸ். படாவனே பகுதியை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 45). வியாபாரி. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு  முன்பு சிவண்ணா, அந்தப்பகுதியில் உள்ள முட்புதரில் ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். 

இதுபற்றி அறிந்ததும் மொலகால்மூரு போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி விசாரித்தனர்.  மேலும், போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் உத்தரவின்பேரில், மர்மநபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

2 பேர் கைது

இந்த நிலையில், சிவண்ணாவுக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதுதொடர்பாக சிவண்ணாவின் கள்ளக்காதலியின் கணவர் சந்திரண்ணாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் தான் சிவண்ணாவை கொலை செய்தது தெரியவந்தது. 
மேலும் அவரது அண்ணன் கிருஷ்ணன் என்பவரின் மகன் சந்தீப்புக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்திரண்ணாவையும், அவரது அண்ணன் மகன் சந்தீப்பையும் கைது செய்து விசாரித்தனர். 

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால்...

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிவண்ணாவுக்கும், சந்திரண்ணாவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் சந்திரண்ணா மனைவியையும், சிவண்ணாவையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் சிவண்ணாவை தீர்த்துக்கட்ட சந்திரண்ணா முடிவு செய்தார். இதுகுறித்து தனது அண்ணன் மகன் சந்தீப்பிடம் சந்திரண்ணா தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் சம்மதித்துள்ளார். 

அதன்படி, அவர்கள் 2 பேரும் சேர்ந்து சிவண்ணாவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து, உடலை முட்புதரில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து மொலகால்மூரு போலீசார் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்