கல்லூரி மாணவிகள்- அரசு பஸ் கண்டக்டர் இடையே தகராறு
கல்லூரி மாணவிகள்- அரசு பஸ் கண்டக்டர் இடையே தகராறு ஏற்பட்டது.;
ஜெயங்கொண்டம்:
முன்விரோதம்
அரியலூர் மாவட்டம் தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி(வயது 20). இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் அரசு பஸ் கண்டக்டர் ஆவார். இவரது மனைவி ரஞ்சிதா. இரு குடும்பத்தினர் இடையே முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி மாலை கல்லூரி முடிந்து கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு பஸ்சில் பயணம் செய்த புவனேஸ்வரி, சிலால் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவரது சுடிதாரின் ஷால், பஸ் படிக்கட்டில் சிக்கிக் கொண்டதால் அவர் இறங்க சிறிது தாமதம் ஆனதாகவும், இதனால் அந்த பஸ்சில் கண்டக்டராக இருந்த தியாகராஜன், சீக்கிரமாக இறங்க மாட்டாயா? என்று கேட்டு, புவனேஸ்வரியை ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
தகராறு
மேலும் நேற்று முன்தினம் புவனேஸ்வரியின் வீட்டிற்கு தியாகராஜனின் மனைவி ரஞ்சிதா சென்று, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அன்று மாலை கல்லூரி மாணவிகள் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இறங்கியபோது, அவர்களை பார்த்து ரஞ்சிதா ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதே மாணவிகள், பஸ்சில் வந்தபோது, கண்டக்டர் தியாகராஜனிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து டிரைவர், கண்டக்டர் மற்றும் மாணவிகள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க திரண்டு வந்தனர். அவர்களை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் சமரசம் செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடம் தா. பழூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டு உள்ளதால் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
இதையடுத்து கண்டக்டர் தியாகராஜன், தா.பழூர் போலீசில் புகார் அளிக்க செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் மாணவிகள், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் தகராறு நடந்ததால், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
புகார்
முன்னதாக இது குறித்து பஸ் கண்டக்டர் தியாகராஜன் தெரிவித்தபோது, தன்னை மாணவர்கள் அடிக்க வந்ததாகவும், மேலும் பணப்பையை பறித்ததாகவும், அதில் இருந்த ஒரு டிக்கெட் புக்கை காணவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.
இதேபோல் கண்டக்டர், மாணவர்களை தாக்க தேவாமங்கலத்தில் இருந்து அடியாட்களை அழைத்ததாகவும், அதற்காக பஸ்சை சிலால் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தியதாகவும், மேலும் கண்டக்டரின் மனைவி ரஞ்சிதாவை விட்டு மாணவிகளையும், மாணவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயங்கொண்டம் போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ராமநாதன், கிளை மேலாளர் ராம்குமார் மற்றும் அரசியல் கட்சியினர், ஊர் முக்கியஸ்தர்கள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.