கர்நாடகத்தில் உளவுத்துறைக்கு தனியாக போலீசாரை நியமிக்க முடிவு-மந்திரி அரக ஞானேந்திரா
கர்நாடகத்தில் உளவுத்துறைக்கு தனியாக போலீசாரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்
பெங்களூரு: கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் சலீம் அகமது கேட்ட கேள்விக்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பதிலளிக்கையில் கூறியதாவது:-
போலீஸ் துறையில் சில நேரங்களில் சரியாக பணியாற்றாத அதிகாரிகள் உளவுத்துறைக்கு மாற்றப்படுகிறார்கள். உளவுத்துறைக்கு தனியாக அதிகாரிகளை நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் அந்த துறையில் கைதேர்ந்தவர்கள் பணியாற்றும் சூழல் ஏற்படும். மேலும் உளவுத்துறைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உளவு தகவல்கள் விரைவாக கிடைக்கும்.
அதற்கு தேவையான தொடர்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மேலும் அதில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்படும். மேலும் உளவுத்துறையில் பணியாற்றும் போலீசார் வேறு இடத்திற்கு செல்வதை ஆர்வமாக எதிர்நோக்குகிறார்கள். பணி இடமாற்றம் கோரி எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து பரிந்துரை கடிதமும் பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.
உறுப்பினர்கள் பேசும்போது, உளவுத்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு ஊக்கத்தொகை வழங்கினால் அவர்கள் அதே இடத்தில் பணியாற்ற ஆர்வம் காட்டுவார்கள் என்று ஆலோசனை கூறினர்.