திருவெறும்பூர்
திருவெறும்பூரையடுத்த துவாக்குடி எம்.டி. சாலையை சேர்ந்த ரமணியின் மகன் ராஜ்குமார்(வயது 28). இவரும், இவரது நண்பர் விஜய்யும் நேற்று முன்தினம் இரவு துவாக்குடி அருகே உள்ள கருப்பு கோவிலின் பின்புறம் மது அருந்தியதாகவும், அந்த வழியாக வந்த துவாக்குடி தெற்குமலையை சேர்ந்த குமாரின் மகன் குட்லு(24) என்பவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கருப்பையா(32) என்பவர் ராஜ்குமாரின் கையில் இருந்த கத்தியை பறித்து, அவரது கழுத்து மற்றும் நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து ராஜ்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு உடனடியாக துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், முன்விரோதம் காரணமாக ராஜ்குமாரை கருப்பையா கத்தியால் குத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.