ஈரோடு மாவட்டத்தில் நடிகர் சூர்யா படம் வெளியான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் நடிகர் சூர்யா படம் வெளியான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நடிகர் சூர்யா படம் வெளியான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நேற்று திரைக்கு வந்தது. ஜெய்பீம் படம் சர்ச்சையை தொடர்ந்து சூர்யா படத்தை தியேட்டர்களில் வெளியிட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடலூரில், எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டர்களில் வெளியிட கூடாது என தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதன் காரணமாக சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைப்போல் சூர்யா படம் வெளியாகும் தியேட்டர்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் 12 தியேட்டர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 38 தியேட்டர்கள் உள்ளன.
தீவிர பரிசோதனை
இதில் நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மாவட்டம் முழுவதும் 26 தியேட்டர்களில் நேற்று திரையிடப்பட்டது. மாநகர் பகுதியில் 5 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தியேட்டரிலும் 10 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள தியேட்டரில் நேற்று காலை 9.30 மணி முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக படம் பார்க்க தியேட்டருக்குள் சென்றவர்கள் ஒவ்வொருவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் சூர்யா படம் வெளியான தியேட்டர்களில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோபி
இதேபோல் நடிகர் சூர்யா படம் கோபியில் உள்ள 2 தியேட்டர்களில் வெளியானது. இதையொட்டி தியேட்டர்களில் சினிமா காட்சி தொடங்குவதற்கு முன்பாகவே நேற்று காலை 6 மணி முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பலத்த சோதனைக்கு பின்னரே ரசிகர்களை தியேட்டருக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.