அரசு பள்ளி மாணவர்கள் ‘திடீர்’ சாலை மறியல்

பாகலூரில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி அரசு பள்ளி மாணவர்கள் ‘திடீர்’ சாலை மறியல் செய்தனர்.

Update: 2022-03-10 20:47 GMT
ஓசூர்:-
ஓசூர் அருகே பாகலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் பாகலூரை சுற்றியுள்ள முகலப்பள்ளி, தும்மனப்பள்ளி, ஓட்டப்பள்ளி, பாலிகானப்பள்ளி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து தினந்தோறும் அரசு பஸ்களில் பயணம் செய்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
பள்ளி முடிந்து மீண்டும் வீடுகளுக்கு செல்ல இவர்களுக்கு போதிய அளவில் அரசு பஸ்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் நீண்டநேரம் அரசு பஸ்சுக்காக காத்திருந்தனர். தினந்தோறும் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை தொடர்வதால் ஆத்திரமடைந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாகலூர்-பேரிகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் நிலையம் அருகிலேயே மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்