எல்.ஐ.சி. ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-03-10 20:47 GMT
தர்மபுரி:-
எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் ஊழியர்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு
எல்.ஐ.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு காப்பீட்டு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் சார்பில் தர்மபுரி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க தர்மபுரி கிளை தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கோட்ட இணைச் செயலாளர் மாதேஸ்வரன், கிளை பொறுப்பாளர் சந்திரமவுலி, அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பழனியம்மாள், தர்மபுரி மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
மெழுகுவர்த்தி ஏந்தி..
இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் திரளாக கலந்துகொண்டு மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். மத்திய அரசு எல்.ஐ.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை பங்கு சந்தையில் முதலீடு செய்யக்கூடாது. எல்.ஐ.சி.யை தனியார் மயப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்